Namma Tiruttani @tiruttaninews

Online Rummy பயங்கரம், உஷார் !!

Tiruttaninews.com

Post From Srinivasa.

காலை தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. கல்லுரியில் படிக்கும் உறவுக்கார பையன் பேரைச் சொல்லி, அவன் எங்களிடம் கடன் வாங்கியுள்ளான். இப்போது போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. பணம் கட்டாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார்கள். மாலை அந்தப்பையனைச் சந்தித்து என்ன விசயம் எனக் கேட்டேன். தலை சுற்ற ஆரம்பித்தது.

முதலில் டிவி & யூ ட்யூப் விளம்பரங்களால் கவரப்பட்டு ஆன்லைனில் ரம்மி சர்க்கிள் ஆடியுள்ளான். முதலில் கொஞ்சம் ஜெயிக்கவும் அடிக்ட் ஆகி விட்டான். வந்த காசில் நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்துப் பழகிவிட்டான்.

பின் கையிருப்பு தீர்ந்த உடன் கடன் கொடுக்கும் ஆப்களில் பணம் வாங்கத் துவங்கியுள்ளான்.இது போன்ற ஆப்கள் அதிபயங்கர நாள் வட்டிக்கு கடன் கொடுக்கின்றன. இவற்றில் நம் ஆதார் கார்டையும், பேன் கார்டையும், அக்கவுண்ட் டீடெயில்ஸையும் கொடுத்து விட்டால் போதும். உடனே நம் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி விடுகிறார்கள். 5000 ரூபாய் கடன் கேட்டால் ₹1500 பிராசசிங் காஸ்ட் என எடுத்து விட்டு ₹3500 ரூபாய் கொடுக்கிறார்கள். ஒரு வாரத்தில் வட்டியோடு (5000க்கு) கட்டாவிட்டால் தினமும் ₹500 அபராத வட்டி வேறு கூடும். அது போக மொபைலில் மிரட்ட ஆரம்பிக்கிறார்கள்.

போன் சுவிட்ச் ஆப் செய்தால், நம் காண்டாக்டில் உள்ள எண்களுக்கு போன் செய்து மிரட்டல் மற்றும் ஆபாசமாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி அடுத்த ஆப்பில் கடன்வாங்கி, இதை அடைத்தோ அடைக்காமலோ மீண்டும் ஜெயித்து விடலாம், கடனை அடைத்து விடலாம் என ஒரு மாயச் சூழலுக்குள் விழுகிறார்கள்.ஒரு மாதத்தில் ஒரு லட்சம் வரை எளிதில் கடன் ஆகி விடுகிறது. இதனால் *பலர் சொத்துக்களை இழக்கிறார்கள். பல தற்கொலைகள்.* பிளாக் மெயில் செய்யவே நூற்றுக் கணக்கானோரை ஒவ்வொரு ஆப்பும் மாத சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள்.

வீட்டிலிருந்தே வருமானம் , மார்க்கெட்டிங் இல்லை மாதம் ₹15,000 வரை சம்பளம் என புறநகர் ரயில், பேருந்துகளில் ஓட்டியிருக்கும் போஸ்டர்களில் சில இம்மாதிரி டெலி காலிங் வேலைகளுக்கு தான். கடன் கொடுக்கும் போதே நம் காண்டாக்ட் லிஸ்டை அக்ஸெஸ் செய்யும் அனுமதியையும் அந்த ஆப் பெற்றுக்கொள்கிறது. தினமும் ஒரு சிம்மையும் காண்டாக்ட் லிஸ்டையும் கொடுத்து விடுவார்கள். ட்யூ டேட் வரை பெண்கள் பேசுகிறார்கள். மிரட்ட ஆண்கள்.

இந்த ஆப்களின் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் எல்லாம் பயங்கரமாய் இருக்கும். சட்டம் மும்பை மாநகர jurisdiction எல்லைக்கு உட்பட்டது போன்றவை. இந்த லாக்டவுனில் நிறைய கல்லூரி மாணவர்கள்,வேலைக்குப் போகாத குடும்பத்தலைவர்கள் இதில் சிக்கியுள்ளனர். கேமிங் ஆப்களை தடை செய்வதோடு மட்டுமில்லாமல் இது போல சட்டவிரோத money lending ஆப்களையும் தடை செய்ய வேண்டும். ரம்மி மட்டுமே ஆடினால் கூட ஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.உஷார்.. உஷார்.. உஷார்.